
இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடரை நடத்திய இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து கோப்பையை இழந்தது. இதுவரை நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் ரசிகர்களை மைதானத்திற்கு வர வைத்ததில் இருந்து, வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக, நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இருக்கிறது.
இந்தியாவில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் தோல்வியடையாது என்பதற்கு, டி20 கிரிக்கெட்டின் எழுச்சியின் மத்தியில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் வெற்றி காட்டி இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் நம்பிக்கையான தைரியமான செய்தி. அதே சமயத்தில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்றதற்கு மிக முக்கிய காரணம் ஆடுகளம்.
பேட்டிங் செய்யும் பொழுது பந்து வீச்சுக்கு சாதகமாகவும், பந்து வீசும் போது பேட்டிங் செய்ய சாதகமாகவும் இருந்த ஒரு ஆடுகளத்தில், இந்திய அணி தங்களது திறமைகளை எல்லாம் விட்டு ஆடுகளத்தில் சிக்கி தோல்வி அடைந்து கோப்பையை தோற்றார்கள். போட்டியின் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு இருக்கும் என்றால், உலகக் கோப்பை மாதிரியான ஒரு இறுதிப் போட்டிக்கு, பேட்டிங் செய்ய இரண்டு பகுதிகளிலும் சாதகமாக இருக்கும் ஒரு ஆடுகளத்தை கொடுப்பதே வழக்கம். அப்பொழுதுதான் ஆட்டம் சமநிலையில் இருக்கும்.