
ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் கோலாகலமாக துவங்கி அகமதாபாத், சென்னை, மும்பை போன்ற பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வெற்றிகரமான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் டாப் 10 கிரிக்கெட் அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.
அதில் எதிரணிகளை வீழ்த்தி சொந்த மண்ணில் 2011 போல ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக பொதுவாகவே இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த அம்சமாகும். இருப்பினும் சமீப காலங்களாகவே இந்தியா வெல்வதற்காக வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைத்து வருவதாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சமீபத்திய டெஸ்ட் தொடர்களின் போது கடுமையாக விமர்சித்தனர்.
அதற்கேற்றாபோல் கடந்த சில வருடங்களாகவே இந்திய மண்ணில் நடைபெறும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் 3 நாட்களுக்குள் முடிந்து விடுவது இந்திய ரசிகர்களுக்கே ஏமாற்றமாக அமைந்து வருகிறது. இந்த நிலைமையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் நடுநிலைமையுடன் நடைபெறுவதற்காக மைதானங்கள் தயாரிப்பு பற்றிய விஷயங்களில் ஐசிசி சில கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.