
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி 28 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.
அதேசமயம் இந்த தொடரின் ஆரம்பத்தில் அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி வந்த எம்ஐ கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் தற்சமயம் அடுத்தடுத்த வெற்றிகளைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள நிலையில், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளனர். இதனால் இதில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஒருபக்கம் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வீரர்கள் காயமடைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்தவகையில் நட்சத்திர வீரர்கள் ஆன்ரிச் நோர்ட்ஜே, ஜெரால்ட் கோட்ஸி, பேட்ரிக் க்ரூகர் உள்ளிட்டோர் காயமடைந்திருக்கும் நிலையில், அந்த பட்டியலில் பார்ல் ராயல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் மில்லரும் இணைந்துள்ளார். இதில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடிய பேட்ரிக் க்ரூகர் நடப்பு சீசனில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.