
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் பில் சால்ட், ஜேமி ஸ்மித அகியோர் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் - ஜோ ரூட் இணை பொறுப்புடன் விளையாடி மூன்றாவது விக்கெட்டிற்கு 158 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். இதில் அரைசதம் கடந்திருந்த ஜோ ருட் 68 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அபாரமாக விளையாடிய பென் டக்கெட் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 165 ரன்களைக் குவித்து விக்கெட்டை இழந்தார்.
அதேசமயம் மற்ற வீரர்களில் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காததால் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் பென் துவார்ஷூயிஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணியிலும் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மேத்யூ ஷார்ட் 63, மார்னஸ் லபுஷாக்னே 47 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.