
இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்திய இந்திய அணியானது, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சியளித்தது. அதிலும் இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இலங்கை அணியானது கடந்த 1997ஆண்டுக்கு (27 ஆண்டுகளுக்கு)பிறகு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான இத்தோல்வியின் மூலம் இந்திய அணி மீதான விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இந்திய அணி வீரர் சோபிக்க தவறியது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில், இலங்கையில் நடந்த ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவின் பேட்டிங் மற்றும் ரியான் பராக்கின் பந்துவீச்சு திறன் இந்திய அணிக்கு மிகப்பெரும் சாதகமாக அமைந்துள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.