
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 11 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் அமஞ்சோத் கவுர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 42 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அமஞ்ஜோத் கவுர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 34 ரன்களையும், ஜி கமலினி 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு பந்து மீதமிருந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.