
ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கின. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 20.50 கோடி என்ற வரலாற்றின் உச்சகட்ட தொகை கொடுத்து வாங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க்கை 24.75 கோடிகள் என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கியது. மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாக இருக்கும் சென்னை, மும்பை அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை சற்று குறைந்த விலையிலேயே வாங்கியது.
குறிப்பாக எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 2023 உலகக் கோப்பையில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் (523) அடித்த வீரராக உலக சாதனை படைத்த ரச்சின் ரவீந்தராவை 1.80 கோடிக்கும், இந்திய வீரர் ஷார்துல் தாக்கூரை 4 கோடிக்கும் வாங்கியது. அதனால் ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக மற்றொரு நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேலை போட்டி போட்டு 14 கோடிக்கு சென்னை வாங்கியது ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.