
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது லீக் போட்டியானது நேற்று புனே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 256 ரன்கள் குவிக்க பின்னர் 257 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 261 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 97 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 103 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் நின்று இந்திய அணியை வெற்றி அழைத்து சென்றார். அவரது இந்த ஆட்டம் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும் இந்த போட்டியில் அவர் அடித்த சதம் மூலம் உலக கோப்பை வரலாற்றில் சேசிங்கின் போது அவர் அடித்த முதல் சதமாகவும், ஒட்டுமொத்தமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடித்த 48ஆவது சதமாகவும் அமைந்தது. இப்படி பல சாதனைகளை விராட் கோலி இந்த சதத்தின் மூலம் படைத்திருந்தாலும் அவர் அடித்த இந்த சதத்திற்கு பின்னால் ஏகப்பட்ட விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.