NZ vs IND, 3rd ODI: மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஒருநாள்; தொடரை வென்றது நியூசிலாந்து!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழைக்காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டதால், ஒருநாள் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. ஹேமில்டனில் நடந்த 2-வது போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் உள்ள செடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதேசமயம் இன்றைய போட்டியிலும் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
Trending
இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு வழக்கம்போல ஷிகர் தவான் - ஷுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இந்த தொடரில் சிறப்பாக் செயல்பட்டு வந்த ஷுப்மன் கில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானும் 28 ரன்களோடு நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய ரிஷப் பந்த் 10, சூர்யகுமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12 என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து சொதப்பினர்.
மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் 49 ரன்களில் ஆட்டமிழந்து நூழிலையில் அரைசதத்தை தவறவிட்டார். இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் ரன்களைச் சேர்க்க, தீபக் சஹார் 2 சிக்சர்களை விளாசி 12 ரன்களிலும், யுஸ்வேந்திர சஹால் 8 ரன்களிலும், அர்ஷ்தீப் சிங் 9 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர்.
ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வாஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து தனது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இறுதியில் அவரும் 51 ரன்களோடு விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 47.3 ஓவர்களில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 219 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஆடம் மில்னே, டெரில் மிட்செல் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் பின் ஆலன் 54 பந்துகளில் 57 ரன்களை சேர்த்து, உம்ரான் மாலிக் வேகத்தில் வீழ்ந்தார். அடுத்து டெவான் கான்வே 38, கேன் வில்லியம்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்த நிலையில் மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டது.
இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவர்களில் 104/1 ரன்களை சேர்த்திருந்த நிலையில், இப்போட்டி மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டாதால் முடிவில்லாமல் அமைந்ததாக போட்டி நடுவர் அறிவித்தார். ஏனெனில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது வீசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இப்போட்டியில் 18 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருப்பதால் முடிவில்லாமல் அமைந்ததாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. மேலும் இத்தொடரின் தொடர் நாயகனாக டாம் லேதம் அறிவிக்கப்பட்டுள்ளார்..
Win Big, Make Your Cricket Tales Now