
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி டி20 போட்டி இன்று நேப்பியரில் நடந்தது.
மழையால் ஆட்டம் தாமதமாகத்தான் தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால் டிம் சௌதி கேப்டன்சி செய்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஃபின் ஆலன் 3 ரன்களுக்கும், வில்லியம்சனுக்கு மாற்று வீரராக களமிறங்கிய மார்க் சாப்மேன் 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் 3வது விக்கெட்டுக்கு டெவான் கான்வே மற்றும் க்ளென் ஃபிலிப்ஸ் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு 10 ஓவரில் 86 ரன்களை குவித்தனர்.