
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் இந்தியாவுக்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலேயே நியூசிலாந்திடம் அடி வாங்கிய இங்கிலாந்து அதன் பின் கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்து புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது.
அத்துடன் தென் ஆப்பிரிக்காவிடம் மும்பையில் சரமாரியாக அடி வாங்கி படுதோல்வியை சந்தித்த அந்த அணி நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் இலங்கையிடமும் மண்ணை கவ்வியது. குறிப்பாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 156 ரன்களுக்கு சுருண்டது.
குறிப்பாக ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் கேப்டன் ஜோஸ் பட்லர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக லகிரு குமாரா 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிஷங்கா 77, சமரவிக்ரமா 65 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்று கொடுத்தனர்.