
ஒருகாலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தவர் விராட் கோலி. இந்தியா தோற்றுவிடும் என உறுதியாக நம்பப்பட்ட பல போட்டிகளை தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெறச் செய்திருக்கிறார் விராட். இவ்வாறு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கி வந்த விராட் கோலி சமீபகாலமாக அவுட் ஆப் ஃபார்மில் இருக்கிறார்.
மைதானத்துக்கு வருவதும், சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்புவதும் விராட் கோலியின் வாடிக்கையாக மாறிவிட்டது. உதாரணமாக, அவர் சதம் அடித்தே மூன்றாண்டுகள் ஆகின்றன என்ற விமர்சனம் அவர் மீது தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வருகிறது. கடைசியாக, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் தான் அவர் சதம் அடித்திருந்தார்.
சதம் கூட வேண்டாம் அரை சதமாவது அடித்தாரா என்றால், அண்மைக்காலமாக அதுவும் இல்லை. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கடுமையாக கிண்டல் செய்தும், வசைப்பாடியும் வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து கோலியை நீக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து கூறும் அளவுக்கு மோசமான ஃபார்மில் அவர் இருக்கிறார். அவரும் எவ்வளவு முயன்று பார்த்தாலும், பழைய ஃபார்முக்கு அவரால் வரவே முடியவில்லை.