இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைந்து விதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக இன்ரு அறிவித்தார். தற்போது 38 வயதான சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இதுவரை மொத்தமாக 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்திய அணிக்காக 2010ஆம் ஆண்டு அறிமுகமான அஸ்வின் இதுநாள் வரை 106 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வந்த அஸ்வின் 151 இன்னிங்ஸில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் என 3503 ரன்களையும், 37 ஐந்து விக்கெட் ஹாலுடன் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இதுதவிர்த்து 116 ஒருநாள் போட்டிகளில் 707 ரன்களையும், 156 விக்கெட்டுகளையும், 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். மேற்கொண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரை வென்ற இந்திய அணியிலும் அஸ்வின் இடம்பிடித்ததுடன், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கும் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இதனையடுத்து அஸ்வினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.