
ஆசிய லெண்ட்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் இலங்கை லையன்ஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் பதான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. உதய்ப்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை லையன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் லீயோ ஃபிரான்ஸிஸ்கோ 2 ரன்னிலும், திலகரத்னே தில்ஷன் 8 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய லசித் லக்ஷனும் 19 ரன்களுடன் நடையைக் கட்டினர். பின்னர் இணைந்த மெவன் ஃபெர்னாண்டோ - கேப்டன் திசாரா பெரேரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் இணைந்து தங்களுடைய அரைசதங்களைப் பூர்த்தி செய்ததுடன், 155 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
அதிலும் குறிப்பாக சிக்ஸர் மழை பொழிந்த திசாரா பெரேரா 35 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 108 ரன்களையும், மறுபக்கம் மெவன் ஃபெர்னாண்டோ 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 81 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் இலங்கை லையன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 230 ரன்களைக் குவித்தது.