-mdl.jpg)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக பேட்டிங்கில் அனைவரும் அசத்த 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சமீப காலமாகவே டி20 போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியானது இந்த சேசிங்கை கடினமாக கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் அபார பவுலிங்கை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்களை கூட முழுவதுமாக பேட்டிங் செய்யாமல் 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழுந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்துவீச்சாளர் சாஹல் 2 விக்கெட்களையும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும்போது 33 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 51 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா பந்து வீச்சிலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார். மொத்தத்தில் இந்த போட்டியில் இளம் வீரர்களைக் கொண்டே இந்திய அணி விளையாடியிருந்தாலும் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது.