
ஆஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டி ஆண்டிகுவாவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த நமீபியா அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியின் கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸை தவிர்த்து மற்ற எந்த வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை.
இதன் காரணமாக நமீபியா அணியானது 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 72 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக எராஸ்மஸ் 36 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா 4 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் டேவிட் வார்னர் 20 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 34 ரன்களையும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 18 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.