
நேற்று ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியே வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக பலராலும் கணிக்கப்பட்டது. நேற்றைய இங்கிலாந்து பிளேயிங் லெவனும் அப்படித்தான் இருந்தது.
அதே சமயத்தில் உலகக்கோப்பை என்று வந்தால் பல பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காகவே விளையாட வரும் நியூசிலாந்து மீது கணிசமான ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஒவ்வொரு உலக கோப்பையிலும் ஏதாவது ஒரு முக்கிய அணியை வெளியே அனுப்பி வைப்பதுதான் நியூசிலாந்தின் முக்கிய வேலை.
இந்த வகையில் நேற்று விதிவிலக்கு இல்லாமல் நியூசிலாந்து இங்கிலாந்துக்கு மிகச்சிறப்பான அதிர்ச்சியை கொடுத்தது. இதை அதிர்ச்சி என்று சொல்வதை விட மிக ஒழுக்கமான விளையாட்டின் மூலம் தோல்வியை பரிசாக இங்கிலாந்து கொடுத்தது என்று சொல்ல வேண்டும். அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் இல்லாமலும், பவுலிங் யூனிட்டில் முக்கியமான சுழற் பந்துவீச்சாளர் சோதி இல்லாமலும் களம் கண்டு, இருப்பதைக் கொண்டு மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டு இங்கிலாந்தை 282 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது அருமையான ஒரு விஷயம்.