
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் சிறப்பன தொடக்கத்தை கொடுத்தனர்.
இதில் வில் யங் 42 ரன்னிலும், டாம் லேதம் 63 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேன் வில்லியம்சனும் 44 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளெண்டல், கிளென் பிலீப்ஸ், மேட் ஹென்றி உள்ளீட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் களமிறங்கிய டிம் சௌதீ தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 23 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் மிட்செல் சான்ட்னர் 50 ரன்களுடனும், வில்லியம் ஓ ரூர்க் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் மேத்யூ பாட்ஸ், கஸ் அட்கின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் டிம் சௌதீ சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார்.