
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் போட்டியில் பர்மிங்ஹாம் ஃபீனிக்ஸ் - டிரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் டாம் பாண்டன் 5 ரன்களிலும், அலெக்ஸ் ஹேல்ஸ் 9 ரன்களிலும், ஜோ ரூட் 2 ரன்னிலும், ரோவ்மன் பாவெல் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் இணைந்த டாம் அல்சப் - இமாத் வசீம் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டாம் அல்சப் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதேசமயம் அவருடன் இணைந்து விளையாடிய இமாத் வசீம் 29 ரன்களைச் சேர்த்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.
அதேசமயம் அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இன்னிங்ஸ் முடிவில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களைச் சேர்த்தது. பர்மிங்ஹாம் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய டிம் சௌதீ 12 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். மேற்கொண்டு இதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றும் வாய்ப்பையும் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.