
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அபிஜீத் தோமர் அதிரடியான தொடக்கத்தை கொடுத்த நிலையில், மற்றொரு தொடக்க வீரரான சச்சின் யாதவ் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அபிஜீத்துடன் இணைந்த மஹிபால் லாம்ரோரும் பொறுப்புடன் விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஜீத் தோமர் தனது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், மறுபக்கம் மஹிபால் லாம்ரோரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 150 ரன்களைத் தாண்டியது.
அதன்பின் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களைச் சேர்த்த நிலையில் மஹிபால் லாம்ரோர் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் தீபக் ஹூடாவும் 7 ரன்களுடன் நடையைக் கட்டினார். இதையடுத்து 12 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 111 ரன்களில் அபிஜீத் தோமரும் விக்கெட்டை இழந்த நிலையி, அடுத்து களமிறங்கிய வீரர்களில் கார்த்திக் சர்மா 35 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.