
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து களமிறங்கியது.
இதையடுத்து கோவை கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் மற்றும் சுரேஷ் குமார் இணை களமிறங்கினர். இதில் சச்சின் 7 பந்துகளை சந்தித்த நிலையிலும் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் சுரேஷ் குமாருடன் இணைந்த நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் முதல் பந்திலிருந்தே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின் அவருக்கு துணையாக விளையாடி வந்த சுரேஷ் குமார் 33 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம் நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ராம் அரவிந்த் 18 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.