டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் நேற்று கோலாகமலாக தொடங்கியது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை எதிரத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரதோஷ் பால் - நாராயணன் ஜெகதீசன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜெகதீசன் 35 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதோஷ் பால் அரைசதம் கடந்து அசத்தினார்.
Trending
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த பிரதோஷ் பால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 88 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் பாபா அபாரஜித்தும் 29 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஹரிஷ் குமார் 8 ரன்களிலும், ராஜகோபால் சதிஷ் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த சஞ்சய் யாதவ் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு உதவினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களைக் குவித்தது. சேலம் அணி தரப்பில் சன்னி சந்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் அமித் சாத்விக் 6 ரன்களிலும், ஆகாஷ் சர்மா 24 ரன்களிலும், அரவிந்த் 17 ரன்களிலும் மோஹித் ஹரிஹரன் 14 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் களமிறங்கிய நட்சத்திர கௌசிக் காந்தி ஒரு பக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் மான் பாஃப்னா 8 ரன்களிலும், அபிஷேக் 3 ரன்களிலும் ஆட்டமிழக்க, 23 ரன்களில் கௌசிக் காந்தியும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் சன்னி சந்துவும் 19 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.
ஆனால் அடுத்து களமிறங்கிய முகமது அத்னான் கான் யாரும் எதிர்பாராத வகையில் சேப்பாக் அணியின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தார். வெறும் 15 பந்துகளை மட்டுமே சந்தித்த 6 சிக்சர்கள் ஒரு பவுண்டரி என மொத்தம் 47 ரன்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now