டிஎன்பில் 2023: சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் வெற்றி!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாரிபில் நடைபெற்றுவரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 15ஆவது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சொந்த ஊரில் விளையாடுவதால் சேலம் அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. ஆனால் ரசிகர்களின் எதிபார்ப்பை சுக்குநூறாக்கும் விதமாகா சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி பேட்டிங்கில் படுமட்டமாக சொதப்பியது.
Trending
அணியின் நட்சத்திர வீரர்களாக கருதப்படும் அமித் சாத்விக் 17 ரன்களுக்கும், கௌசிக் காந்தி 3 ரன்களுக்கும், மான் பாஃப்னா ஒரு ரன்னிலும், அபிஷேக் ரன்கள் ஏதுமின்றியும், கௌரி சங்கர் 17 ரன்களிலும், அத்னான் கான் 8 ரன்களிலும், சன்னி சந்து 16 ரன்களிலும் என அடுத்தடுத்து வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியில் கேப்டன் அபிஷேக் தன்வரும் 29 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் 19.4 ஓவர்களில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 98 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 3 விக்கெட்டுகளையும், கௌதம், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆதித்யா 8 ரன்களிலும், கேப்டன் ஹரி நிஷந்த் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடந்து களமிறங்கிய ஜெகதீசன் கௌசிக்கும் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரீ அபிஷேக் - ஸ்வப்னில் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் 32 ரன்களையும், ஸ்வப்னில் சிங் 25 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 13 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
Win Big, Make Your Cricket Tales Now