
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அணியின் தொடக்க வீரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த முகமது வசீம் - ஷ்யாம் சுந்தர் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்யாம் சுந்தர் 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முகமது வசீம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். மேற்கொண்டு அவருடன் இணைந்த சஞ்சய் யாதவும் அபாரமாக விளையாட இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைக் கடந்தது. இதில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சஞ்சய் யாதவ்வும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்களைக் குவித்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த வசீம் அஹ்மத் 7 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 90 ரன்களையும், சஞ்சய் யாதவ் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 60 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ஃபினிஷிங்கை கொடுத்தனர். மதுரை அணி தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அலெக்ஸாண்டர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி மதுரை பாந்தர்ஸ் அணி விளையடியது.