
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க சிறப்பாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் சுஜய் 8 ரன்களிலும், சுரேஷ் குமார் 3 ரன்களிலும், முகிலேஷ் 5 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் அந்த அணி 26 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் இணைந்த சய் சுதர்ஷன் - ராம் அரவிந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன்பின் 25 ரன்களில் ராம் அரவிந்த் விக்கெட்டை இழக்க, நிதானமாக விளையாடிய சாய் சுதர்ஷனும் 33 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாருக் கான் - அதீக் உர் ரஹ்மான் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஷாருக் கான் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
மேலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷாருக் கான் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், அதீக் உர் ரஹ்மான் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் தொடக்க வீரர் விமல் குமார் 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.