ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் நடப்பு சாம்பியன் லைகா கோவை கிங்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அணியானது இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு சந்தோஷ் குமார் - ஜெகதீசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சந்தோஷ் குமார் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜெகதீசனுடன் இணைந்த பாபா அபாரஜித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் ரஞ்சன் பால் 19 ரன்களுக்கும், டேரில் ஃபெரேரியோ 4 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 7 ரன்களிலும் என அடித்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனால் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் பாபா அபாராஜித் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், அணியை வலிமையான ஸ்கோரை நோக்கியும் அழைத்துச் சென்றார். அவருக்கு துணையாக விளையாடிய அபிஷேக் தன்வரும் அதிரடியாக விளையாடினார்.