
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 11ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் - மொஹித் ஹரிஹரன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மொஹித் ஹரிஹரன் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அருண் கார்த்திக்குடன் இணைந்த ஹரிஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
இதில் ஹரிஷ் 29 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய அஜிதேஷ் குருஸ்வாமி 17 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அருண் கார்த்திக் 47 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய வீர்ர்களில் சோனு யாதவ் அதிரடியாக விளையாடியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 43 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன்மூலம் நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை மட்டுமே சேர்த்தது. கோவை அணி தரப்பில் ஷாருக் கான், முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லைகா கோவை கிங்ஸ் அணியில் சாய் சுதர்ஷன் 8 ரன்களில் அட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த சுரேஷ் குமார் - பாலசுப்ரமணியம் சச்சின் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 140 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.