
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு விஷால் வைத்யா - கேப்டன் அபிஷேக் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்ற விஷால் வைத்யா 36 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து கேப்டன் அபிஷேக்கும் 20 ரன்களில் நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய சுதன் சஞ்சீவியும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தர். அதேசமயம் மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜேந்திரன் விவேக் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய ஹரிஷ் குமார் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்தாலும் 174 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் - ஜெயராமன் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுரேஷ் குமார் 14 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சாய் சுதர்ஷனும் 22 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய முகிலேஷ் 14 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் 10 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சுஜயும் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.