
டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து திருச்சி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு வசீம் அஹ்மத் - அர்ஜுன் மூர்த்தி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அர்ஜுன் மூர்த்தி 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த வசீம் அஹ்மத் 17 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷ்யாம் சுந்தர் 5 ரன்களிலும், அந்தோனி தாஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய நிர்மல் குமார் 3 ரன்களிலும், சரவண குமார் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழக்க திருச்சி அணியானது 35 ரன்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் - ஜாஃபர் ஜமால் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட்டை இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரி அடித்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர்.