
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் 8ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணிக்கு சுஜய் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். சுரேஷ் குமார் 6 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 27 ரன்களில் சுஜய் தனது விக்கெட்டை இழந்தார். அவர்களைத் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சச்சினும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய முகீலேஷ் 13 ரன்களிலும், முகமது ரன்கள் ஏதுமின்றியும், ராம் அரவிந்த் 13 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாருக் கான் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 55 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைச் சேர்த்தது. திருப்பூர் அணி தரப்பில் நடராஜன், அஜித் ராம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய திருப்பூர் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ராதா கிருஷ்ணன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அமித் சாத்விக்கும் 12 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த துஷார் ரஹேஜா மற்றும் கேப்டன் விஜய் சங்கர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துஷார் ரஹேஜா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் விளையாடிய விஜய் சங்கர் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.