
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் பிஸ்ட் வந்த வேகத்திலேயே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கவினுடன் இணைந்த விஷால் வைத்யாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கவின் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இந்த இணை மூன்றாவது விக்கெட்டிற்கு 66 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தார். பின்னர் அதிரடியாக விளையாடி வந்த கவின் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 70 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய ராஜேந்திரன் விவேக் ஒரு ரன்னிற்கும், சன்னி சந்து 10 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். ஆனாலும் அதிரடியாக விளையாடி வந்த விஷால் வைத்யா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 56 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் முருகன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், அலெக்ஸாண்டர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.