
திருநெல்வேலி: மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் அணி வீரர்கள் அமித் சாத்விக் மற்றும் துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளனர்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. திருநெல்வேலியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் ராம் அரவிந்த் ஒரு ரன்னிலும், அனிருத் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் சதுர்வேத் 10 ரன்னிலும், ஷங்கர் கனேஷ் 13 ரன்னிலும், ஆதீக் உர் ரஹமன் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் சரத் குமார் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களையும், ராஜலிங்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 22 ரன்களையும், முருகன் அஸ்வின் மற்றும் குர்ஜப்நீத் சிங் ஆகியோர் தலா 13 ரன்களையும் சேர்த்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன், கேப்டன் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நடராஜன், மோகன் பிரசாத், எசக்கிமுத்து அகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.