
டிஎன்பிஎல் 2025, குவாலிபையர் 2: விமல் குமாரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பு டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆசிக் 8 ரன்னிலும், மோஹித் ஹரிஹரன் 4 ரன்னிலும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் பாபா அபாரஜித் மற்றும் ஜெகதீசன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். அதன்பின் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 67 ரன்களில் அபாரஜித் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 4 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 81 ரன்களைச் சேர்த்திருந்த ஜெகதீசனும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களை சேர்த்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.