
சேலம்: டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர் சூர்யா ஆனந்த் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தர்.
டிஎன்பில் தொடரின் 9அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனிருத் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மறுமுனையில் அரவிந்த் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் சதுர்வேத், ஷியாம் சுந்தர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் அனிருத்துடன் இணைந்த ஆதிக் உர் ரஹ்மானும் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் அனிருத் 48 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் 36 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் சரவணன் 16 ரன்களையும், குர்ஜப்நீத் சிங் 24 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர். இதன்மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. ராயல் கிங்ஸ் தரப்பில் சோனு யாத்வ் 3 விக்கெட்டுகளையும், ராக்கி பாஸ்கர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.