
9ஆவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பில்) தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய திருச்சி அணிக்கு சுஜய் மற்றும் கேப்டன் சுரேஷ் குமார் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுஜய் 12 ரன்களுக்கும், சுரேஷ் குமார் 9 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த வசீம் அஹ்மத் மற்றும் ஜாஃபர் ஜமால் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வசீம் அஹ்மத் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 41 ரன்களிலும், ஜாஃபர் ஜமால் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 39 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் களமிறங்கிய ராஜ் குமார் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இரண்டு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். அதிலும் குறிப்பாக சரவண குமார், கௌஷிக் மற்றும் செல்வகுமரன் ஆகியோர் சோனு யாதவின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களை மட்டுமே சேர்த்தது. நெல்லை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சோனு யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.