
நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கோவையில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மதிரை பாந்தர்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ராம் அரவிந்த் மற்றும் பாலச்சந்தர் அனிருத் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அனிருத் 23 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராம் அரவிந்தும் 37 ரன்களில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு களமிறங்கிய சரவணனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் சதூர்வேத் மற்றும் ஆதீக் உர் ரஹ்மான் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அவ்வபோது பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரையும் உயர்த்தினர்.
இதில் சதூர்வேத் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களிலும், ஆதீக் உர் ரஹ்மான் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 38 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் 17 ரன்களை சேர்த்திருந்த கணேஷும் தனது விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்தது. ஸ்பார்டன்ஸ் தரப்பில் முகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணிக்கு தொடக்கம் அவ்வளவு சிறப்பானதாக அமையவில்லை.