
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 207 ரன்களை குவித்தது. இந்த ஆட்டத்தில் குஜராத் அணி சார்பாக துவக்க வீரர் சுப்மன் கில் 56 ரன்களையும், பின்வரிசையில் டேவிட் மில்லர் 46 ரன்களையும், அபினவ் மனோகர் 42 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அவர்களது இந்த அதிரடி காரணமாக குஜராத் அணி 207 ரன்களை குவித்தது. பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவிக்க 55 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் குஜராத் அணி 180 ரன்களையாவது எட்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பின் வரிசையில் களமிறங்கிய அபிநவ் மனோகர் 21 பந்துகளை சந்தித்து மூன்று பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 42 ரன்கள் குவித்ததன் காரணமாக அவருடன் இணைந்த மில்லர் மற்றும் திவாதியா ஆகியோர் அதிரடியாக விளையாட அந்த அணி 200 ரன்களை கடந்தது. இப்படி அபிநவ் மனோகர் விளையாடிய அதிரடியான ஆட்டத்திற்கு அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.