அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது எனக்கு கிடைத்த பாக்கியம் - மைக்கேல் பிரேஸ்வெல்!
நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது என அந்த அணியின் மைக்கேல் பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளதால், அதற்கு தயாராகும் வகையில் இரு அணியும் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளன. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஐபிஎல் தொடரில் நியூசிலாந்து அணியைச் சேர்ந்த கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, டிரெண்ட் போல்ட், லோக்கி ஃபார்குசன், கிளென் பிலீப்ஸ் மிட்செல் சாண்ட்னர், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திர போன்ற நட்சத்திர வீரர்கள் பங்கேற்றுள்ளதால் அவர்களுக்கு இத்தொடரிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Trending
இதன் காரணமாக இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தனது மிகப்பெரும் கௌரவம் என பிரேஸ்வெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர்,”முதலில் நான் மீண்டும் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதில் இருந்து நீண்ட காலம் ஓய்வில் இருந்தாலும், மீண்டும் களத்தில் இறங்குவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி இத்தொடரின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் கௌரவமாகும். ஏனெனில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருக்க வேண்டும் என்பது நான் சிறுவனாக இருந்தபோது கண்ட கனவு. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது எனக்கு கிடைத்துள்ள பெரிய பாக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now