
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இந்தப் போட்டி நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக இரு அணி வீரகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் ஐசிசி இறுதிப்போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்த்த வீரர் எனும் விராட் கோலியின் சாதனையை டிராவிஸ் ஹெட் முறியடிக்கவுள்ளார்.
விராட் கோலி இதுவரை 9 ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடி 411 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம், டிராவிஸ் ஹெட் 3 இன்னிங்ஸ்களில் மட்டுமே விளையாடி 318 ரன்களை எடுத்துள்ளார். அதிலும் அந்த மூன்று முறையும் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டுமே இந்த ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு மறக்கமுடியாத சதங்கள் அடங்கும், ஒன்று கடந்த 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, மற்றொன்று 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகும்.