
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் மேத்யூ பிரீட்ஸ்கி 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 150 ரன்களையும், வியான் முல்டர் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களையும் சேர்த்தனர். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் வில்லியம் ஓரூர்க் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் வில் யங் 19 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து ஜோடி சேர்ந்த டெவான் கான்வே - கேன் வில்லியம்சன் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் டெவான் கான்வே 97 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட நிலையில், மறுபக்கம் அபாரமாக விளையாடிய கேன் வில்லியம்சன் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 13 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 133 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.