
ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் குவித்திருந்தார்.
213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். பேட்டிங் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
பிறந்த நாளில் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா வீசிய நக்கிள் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அந்த பந்தை தவறாக கணித்த ரோஹித் சர்மா, அதிவேகமாக ஆடினார். மெதுவாக ஸ்விங் ஆகி வந்த பந்து ஆஃப்-ஸ்டம்பின் மேல் முத்தமிட்டது போல் தொட்டு பைஸ்ஸை கீழே தள்ளியது. இதனால் அவுட் என்ற முறையில் ரோகித் சர்மா வெளியேற, அப்போதிருந்து ட்விட்டரில் எண்ணற்ற ட்விட்டர் வாசிகள் ரோஹித் சர்மா உண்மையிலேயே அவுட்டானாரா என்று விவாதம் செய்து வருகின்றனர்.