-mdl.jpg)
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் 13 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ஸஸாய் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த குர்பாஸ் - கேப்டன் இப்ராஹிம் ஸத்ரான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின் 7 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 100 ரன்களில் குர்பாஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் கடந்திருந்த ஸத்ரானும் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களைக் குவித்தது.