
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது நேற்று நடைபெற்றது. அதன்படி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தன்ஸித் ஹசன் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பர்வேஸ் ஹொசைன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரரான தன்ஸித் ஹசன் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய கேப்டன் லிட்டந்தாஸும் 11 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பர்வேஸ் ஹொசைன் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருடன் இணைந்து விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோய் 20 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு பெவிலியனுக்கு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய மஹிதி ஹசன் மிராஸ் 2 ரன்களுக்கும், ஜக்கர் அலி 13 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு ஷமிம் ஹொசைனும் 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு பெவிலியனுக்கு திரும்ப ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பர்வெஸ் ஹொசைன் எமான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.