
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் மற்றும் தன்ஸித் ஹசன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தன்ஸித் ஹசன் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அதன்பின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தன்ஸித் ஹசன் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 59 ரன்களை சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் லிட்டன் தாஸுடன் இணைந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். இப்போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லிட்டன் தாஸ் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத்தொடர்ந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோவும் 27 ரன்களை மட்டுமே எடுத்திருந்த கையோடு ஆட்டமிழந்தார்.