
ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வழக்கம் போல சாத் பௌஸ் மற்றும் டிம் செய்ஃபெர்ட் இணை களமிறங்கினர்.
இதில் சாத் பௌஸ் 9 ரன்களுக்கும், செய்ஃபெர்ட் 13 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த வில் யங் மற்றும் மார்க் சாப்மேன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தடுத்து அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர்.