டி20 உலகக்கோப்பை 2024: முதல் முறையாக தகுதிப்பெற்று உகாண்டா அணி சாதனை !
உகாண்டா அணி முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி ஐசிசி தொடருக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும்.
டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த 2007ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 8 டி20 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அந்த தொடர்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இந்நிலையில் 9ஆவது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் போட்டியை நடத்தும் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேரடியாகவும், 2022 டி20 உலகக்கோப்பையில் முதல் எட்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளும், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் டி20 தரவரிசை அடிப்படையிலும் உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றன.
Trending
மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனடிப்படையில் நடைபெற்ற தகுதி சுற்றுகளின் முடிவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன் ஆகிய 6 அணிகள் தகுதி பெற்றன. மேலும் கடைசி 2 அணிகளுக்கான ஆப்பிரிக்கா பிராந்திய தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன. இதில் 5 போட்டியில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்ற நமீபியா 19ஆவது அணியாக தகுதி பெற்றது.
மீதமுள்ள 1 இடத்திற்கு ஜிம்பாப்வே, உகாண்டா, கென்யா அணிகளுக்கு இடையே கடும்போட்டி நிலவியது. இந்நிலையில் அந்த 1 இடத்தை நிர்ணயிக்கும் கடைசி ஆட்டத்தில் உகாண்டா - ருவாண்டா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்ற சூழ்நிலையில் விளையாடிய உகாண்டா, முதலில் பேட்டிங் செய்த ருவாண்டா அணியை 65 ரன்களில் சுருட்டியது.
பின்னர் 66 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா 8.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உகாண்டா முதல் முறையாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. உகாண்டா கிரிக்கெட் அணி ஐசிசி தொடருக்கு தகுதிபெறுவது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் ஜிம்பாப்வே அணி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்ற அணிகள்:
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா.
Win Big, Make Your Cricket Tales Now