
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 8 பிரிஸ்பேனிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி பெர்த் கிரிகெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணைக்கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் தொடர்கின்றனர். அதேசமயம் நடந்து முடிந்த மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சோபிக்க தவறிய அதிரடி தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இத்தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.