
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 24 வயது இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுவதால் மிகக் குறுகிய காலத்திலேயே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய கவனத்தை ஈர்த்திருந்தார். அதோடு 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான உம்ரான் மாலிக் அடுத்த ஆண்டே இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் என இரண்டு வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகினார்.
ஆனால் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் 10 போட்டிகள், டி20 கிரிக்கெட்டில் 8 போட்டிகள் மட்டுமே விளையாடிய நிலையில், அவர் இந்திய அணியில் இருந்து ஒரே அடியாக ஓரங்கட்டப்பட்டார். மேலும் அவரை 15 பேர் கொண்ட அணியில் கூட இந்திய அணி சேர்க்காமல் இருந்து வருகிறது. அதோடு ஐபிஎல் தொடரிலும் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் இருந்து வருகிறார்.
இப்படி இந்தியாவில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் ஒரே பந்துவீச்சாளராக இருக்கும் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருந்து வருவது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் உம்ரான் மாலிக்கிற்கு ஏன் இடம் கிடைக்கவில்லை? என்பது குறித்து அந்த அணியின் முக்கிய நிர்வாகியான முத்தையா முரளிதரன் பதில் அளித்துள்ளார்.