
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் முதல் (2019 – 2021) தொடரில் விராட் கோலி தலைமையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2ஆவது தொடரில் (2021 – 2023) ரோஹித் சர்மா தலைமையில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடமும் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதை தொடர்ந்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பயணத்தில் முதலாவதாக வலுவான தென் ஆப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா எதிர்கொள்கிறது. அதை தொடர்ந்து தங்களுடைய சொந்த மண்ணில் வரும் ஜனவரி மாதம் வலுவான இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
கடைசியாக கடந்த 2012இல் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா அதன் பின் 11 வருடங்களாக சொந்த மண்ணில் உலகில் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இருந்து வருகிறது. எனவே இம்முறையும் இந்தியா வெல்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கு இங்கிலாந்து மிகப்பெரிய சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.