
இந்திய அண்டர்19 அணி இங்கிலாந்தில் சுற்றுயணம் செய்து தற்சமயம் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செல்ம்ஸ்ஃபோர்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி எகான்ஷ் சிங் சதமடித்ததுடன் 117 ரன்களையும், கேப்டன் தாமஸ் ரீவ் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற அந்த அணி முதல் இன்னிங்ஸில் 309 ரன்களைச் சேர்த்தது ஆல் ஆவுட்டானது. இந்திய அணி தரப்பில் நமன் புஷ்பக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 279 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் விஹான் மல்ஹோத்ரா சதமடித்ததுடன் 120 ரன்களையும், கேப்டன் ஆயூஷ் மாத்ரே 80 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இங்கிலாந்து தரப்பில் ரால்பி ஆல்பர்ட் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பின் 30 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டௌகின்ஸ் 136 ரன்களையும், ஆடம் தாமஸ் 91 ரன்களையும் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.